செய்திகள்

நைஜீரியா: போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பலி

Published On 2017-06-19 13:44 GMT   |   Update On 2017-06-19 13:44 GMT
நைஜீரியா நாட்டின் போர்னோ மாவட்டத்தில் வீடிழந்தோருக்கான தற்காலிக முகாம் அருகில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மைடுகுரி:

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். கடந்த எட்டாண்டுகளாக இவர்களின் கொலைவெறிக்கு சுமார் 20 ஆயிரம் மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

இதுதவிர, இவர்களின் வெறியாட்டத்தால் வீடுகள் மற்றும் இதர சொத்துக்களை பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அந்நாட்டு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

அவ்வகையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரையொட்டி இருக்கும் கோஃபா என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தற்காலிக முகாமில் பலர் தங்கி வருகின்றனர்.

இந்த முகாமின் அருகாமையில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு சுமார் 9 மணியளவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:    

Similar News