செய்திகள்

2019 முதல் கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்கிறது சுவிட்சர்லாந்து

Published On 2017-06-16 16:09 GMT   |   Update On 2017-06-16 16:10 GMT
கருப்பு பணம் குறித்த தகவல்களை, தானியங்கி தகவல் பரிமாற்றம் என்ற புதிய முறையில் இந்தியாவுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தங்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பான விவரங்களை பெறும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கருப்பு பணம் குறித்த தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ளும் வகையில் தானியங்கி தகவல் பரிமாற்ற திட்ட வரைவு அறிவிக்கைக்கு (ஏஇஓஐ) சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, எடுக்கப்படும் முடிவின் மீது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாது. அதாவது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மேற்கொண்டு கால தாமதம் ஏற்படாது.

இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் நிதி கணக்கு தொடர்பான விவரங்களை தானாகவே பகிர்ந்து கொள்வதை சுவிட்சர்லாந்து உறுதி செய்துள்ளது. வரி தொடர்பான தகவல்களை தானாகவே பகிர்ந்து கொள்ளும் வகையில் சர்வதேச உடன்பாடு உள்ளது.

இதுகுறித்து சுவிஸ் பெடரல் கவுன்சில் கூறும்போது, “2018-ம் ஆண்டில் இந்த புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். முதல் தகவல் தொகுப்பு 2019-ம் ஆண்டு பகிர்ந்து கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.

இந்த தானியங்கி தகவல் பரிமாற்றம் எந்த தேதியிலிருந்து தொடங்கும் என்கிற தகவலை விரைவில் மத்திய அரசுக்கு பெடரல் கவுன்சில் தெரிவிக்கும்.
Tags:    

Similar News