செய்திகள்

இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப இஸ்லாமாபாத் கோர்ட் அனுமதி

Published On 2017-05-24 06:54 GMT   |   Update On 2017-05-24 06:55 GMT
பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த விவகாரத்தில், இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (வயது 20). பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்தவர் தாகிர் அலி. இருவரும் மலேசியாவில் சந்தித்தபோது, காதல் வயப்பட்டனர். இதையடுத்து, கடந்த 1–ந் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தான்பில் கடந்த 3–ந் தேதி, தாகிர் அலிக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. 

பின்னர் 5–ந் தேதி உஸ்மா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தாகிர் அலி தூதரகத்தை அணுகிய போது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.



இதனையடுத்து தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் கோர்ட்டில் உஸ்மா புகார் மனு கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலமும் அளித்தார்.

வாக்குமூலத்தில், "நான் தாகிர் அலியை திருமணம் செய்வதற்காக, பாகிஸ்தானுக்கு வரவில்லை. அவரும், நானும் நண்பர்கள். அவரையும், பாகிஸ்தானையும் பார்ப்பதற்காகவே விசா எடுத்து வந்தேன்.

ஆனால், தாகிர் அலியும், அவருடைய நண்பர்களும் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். சித்ரவதை செய்தனர். அதனால் வலுக்கட்டாயமாக இந்த திருமணம் நடந்தது. எனது பயண ஆவணங்களையும் பறித்துக்கொண்டனர். மேலும், தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், 4 குழந்தைகள் உள்ளனர் என்பதை என்னிடம் மறைத்து விட்டார்" உஸ்மா கூறி இருந்தார். 

உஸ்மாவின் மனு அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. உஸ்மா, பாகிஸ்தானை சுற்றி பார்க்கவே விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும், திருமண திட்டம் எதையும் குறிப்பிடவில்லை என்றும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் உறுதி செய்தது.

இந்நிலையில்,  கட்டாயப்படுத்தி திருமணம் செய்த விவகாரத்தில், இளம் பெண் உஸ்மாவை இந்தியா அனுப்ப இஸ்லாமாபாத் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. 



இதனையடுத்து வாகா எல்லை உஸ்மா செல்லும் போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் இஸ்லாபாத் நீதிமன்றம் அந்நாட்டு போலீசாருக்கு வலியுறுத்தியது.
Tags:    

Similar News