செய்திகள்

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம்: பிரதான எதிர்க்கட்சி முடிவு

Published On 2017-04-26 10:57 GMT   |   Update On 2017-04-26 10:57 GMT
நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
காத்மாண்டு:

நேபாளத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாதேசி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்றும், மாநில எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையின் விளைவாக சுமார் 50 பேர் பலியாகி உள்ளனர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் மே 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மாதேசி கட்சிகள் கூறியுள்ளன.

இதையடுத்து மாதேசி கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின்படி, மாகாணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் எல்லைகள் தொடர்பாக, ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு மத்திய ஆணையத்தை அரசாங்கம் அமைக்கலாம்.

ஆனால், இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்க, தீவிர போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, உயர் நிலைக் குழுவை அனுப்புவதற்கு கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்தமானது அரசியலமைப்புக்கும் மக்களின் விருப்பங்களுக்கும் எதிரானது. நாட்டை மேலும் ஸ்திரமற்ற தன்மைக்கு கொண்டு செல்லும். புதிய சட்டத்திருத்தங்கள், தேர்தலை பாதிப்பதுடன், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எனவே, உடனடியாக இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்’ என அக்கட்சியின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Similar News