செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் அமெரிக்காவில் கைது

Published On 2017-04-14 19:34 GMT   |   Update On 2017-04-14 19:34 GMT
சிறுமிகளின் பிறப்புறுப்பு சிதைத்த குற்றத்திற்காக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஜமுனா நகர்வாலா, அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுளாளார். 6 முதல் 8 வயதான பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை சிதைத்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

44 வயதாகும் நகர்வாலா, மிச்சிகன் மாகாணத்தின் லிவோனியாவில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் சிறப்பு மருத்துவப் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து, நகர்வாலாவை கைது செய்த போலீசார் டெட்டராய்டில் உள்ள ஐக்கிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நகர்வாலாவை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.



18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது குற்றம் என கடந்த 1996-ல் அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றங்கள்  மட்டும் நிரூபிக்கப்பட்டால், நகர்வாலாவுக்கு, அமெரிக்க விதிகளின் படி அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நகர்வாலா, அதிர்ச்சி தரக்கூடிய மிருகத்தனமான செயல்களை செய்துள்ளதாக அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

Similar News