செய்திகள்

டிரம்ப் அதிரடி உத்தரவு: சிரியா விமானப்படை தளத்தின் மீது அமெரிக்க விமானப்படை ஏவுகணை வீச்சு

Published On 2017-04-07 05:25 GMT   |   Update On 2017-04-07 07:19 GMT
வி‌ஷ குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டொனால்டு டிரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவால் சிரியா விமானப்படை தளம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
வாஷிங்டன்:

சிரியாவில் அதிபர் ப‌ஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக 7 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் பொது மக்கள் வாழும் பகுதியில் சிரியா ராணுவம் வி‌ஷ குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். போட்டோக்கள் வெளியாகி மனதை உலுக்கின.

இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கும் வகையில் நேற்று சிரியாவின் விமானப்படை தளம் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போர்க்கப்பல்களில் இருந்து 60 ஏவுகணைகள் வீசப்பட்டன.

அவை வி‌ஷகுண்டு தாக்குதல் நடத்திய சாய்ரத் விமானப்படை தளத்தின் மீது விழுந்து தாக்கியது. இத்தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியது இல்லை. தற்போது முதன் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரான பிறகு டொனால்டு டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தும் படி முதன் முறையாக கையெழுத்திட்டுள்ளார். இதை அவரே வெளியிட்டுள்ளார். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வி‌ஷகுண்டு தாக்குதலை கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீன அதிபர் ஷின்பிங் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புளோரிடாவில் மார் - ஏ- லாகோ விடுதியில் இவர்கள் இருவரும் சந்தித்தனர். அப்போது சிரியா மீதான தாக்குதல் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார்.

முன்னதாக இத்தகவல் சிரியாவின் நட்பு நாடான ரஷியாவுக்கும் தெரிவிக்கப்பட்டது.

Similar News