செய்திகள்

தரையிறங்கும்போது விமானத்தில் உயிரிழந்த துணை விமானி

Published On 2017-03-31 12:37 GMT   |   Update On 2017-03-31 12:37 GMT
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய துணை விமானி பயணத்தின்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக 737-800 விமானமொன்று, நேற்று முன்தினம் டல்லாஸ் பகுதியிலிருந்து மெக்சிகோவின் ஆல்புகெர்க்கி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க 2 மைல்கள் இருக்கும்போது காக்பிட்டில் இருந்த துணை பைலட்டிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து விமான கேப்டன் எமர்ஜென்சி நிலையை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட கேப்டன் விமானத்தின் துணை பைலட்டுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் எமெர்ஜென்சி நிலையை அறிவிக்கிறேன் என்று கூறுகிறார். இதற்கு கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் உத்தரவு தருகின்றனர்.

தொடர்ந்து எந்த கேட்டை நோக்கி விமானம் செல்கிறது? என கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் கேட்க அதற்கு பிராவோ 1 எனக்கூறும் கேப்டன் கட்டுப்பாட்டு அறைக்கு நன்றி கூறுகிறார்.



எனினும் விமானம் தரையிறங்குவதற்கு முன்பே துணை விமானியின் உயிர் பிரிந்துவிட்டது. துணை விமானி இறந்த சம்பவம் பயணிகளுக்கு தெரியாது என்பதால் விமானம் தரையிறங்கியவுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக விமானத்தை விட்டு கீழிறங்குமாறு கேப்டன் கேட்டுக்கொண்டார்.

இறந்துபோன துணை விமானி வில்லியம் மைக் கிரப்ஸ் குடும்பத்தினருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

Similar News