செய்திகள்

பி.பி.சி. தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளரை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

Published On 2017-03-30 14:11 GMT   |   Update On 2017-03-30 14:11 GMT
இங்கிலாந்து நாட்டில் பி.பி.சி. தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் மரியோ பெரிவொய்டோஸ் (வயது 41) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் மேஜர் எனப் பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் உரிமையாளருக்கு நாய் உதவியாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 20-ந்தேதி பி.பி.சி. செய்தி நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர்கள் மரியோவை பேட்டி எடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், நாய் திடீரென வெறிப் பிடித்ததுபோல் குரைத்துள்ளது.

நாயை சாந்தப்படுத்த உரிமையாளர் போராடியுள்ளார். ஆனால், அசுரத்தனமாக மாறிய அந்த நாய் உரிமையாளர் மீது பாய்ந்து அவரது கழுத்தை கடித்து குதறியுள்ளது. இக்காட்சியைக் கண்ட ஊடகவியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், உரிமையாளரை காப்பாற்ற போராடியுள்ளனர்.



ஆனால், கழுத்துப் பகுதி முழுவதையும் நாய் கடித்து குதறியதில் ரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது. படுகாயத்துடன் உரிமையாளரை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் உரிமையாளர் மறுநாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் குறித்து பிபிசி நிறுவனம் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News