செய்திகள்

வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலியா

Published On 2017-03-30 05:37 GMT   |   Update On 2017-03-30 05:37 GMT
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன
பிரிஸ்பன்:

பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது.

இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

இங்குள்ள பிரிஸ்பன் நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அடியோடு பாதித்துள்ளது. மின்சார துண்டிப்பால் நகரம் இருளில் மூழ்கி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.


2 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மழை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் 50 பேர் வெள்ளத்தில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் சிக்கி இருப்பவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது.

ஆக்னஸ் என்ற இடத்தில் காட்டு ஆறு உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. எனவே, ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன.

Similar News