செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலை யாராலும் தடுக்க முடியாது: நேபாள பிரதமர் பிரசண்டா பேட்டி

Published On 2017-03-29 14:01 GMT   |   Update On 2017-03-29 14:01 GMT
நேபாளத்தில் மே 14-ம் தேதி திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் பிரதமர் பிரசண்டா தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு:

நேபாளத்தில் வரும் மே 14-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாகாண எல்லை தொடர்பான மறு வரையறை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தபிறகே தேர்தலை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு வார காலம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய நேபாள பிரதமர் பிரசண்டா, காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘மே 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். இதற்கான சாதகமான சூழ்நிலையை அரசு உருவாக்கி வருகிறது. மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும். எனவே, இந்த தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மாதேசி கட்சிகள் இந்த தேர்தலில் பங்கேற்கும் என நம்புகிறேன். எனவே, தேர்தலைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்’ என்றார்.

நேபாளம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இந்தியா ஆதரவு அளித்துள்ளது. சீன அரசாங்கம் ஒரு மில்லியன் டாலர் கொடுப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News