செய்திகள்

இந்திய தேசியக் கொடியை அவமதித்த சீன ஊழியர்: நொய்டா நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம்

Published On 2017-03-28 16:15 GMT   |   Update On 2017-03-28 16:15 GMT
நொய்டாவில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தின் சீன ஊழியர் தேசியக் கொடியை அவமதித்ததை கண்டித்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நொய்டா:

நொய்டாவில் உள்ள ஒரு சீன செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் சீன அதிகாரி ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அதனை குப்பைத்தொட்டியில் போட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த, தொழிலாளர்கள் அந்த அதிகாரியைக் கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசியக்கொடியை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் கம்பெனி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கம்பெனிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இரு தரப்பும் சுமுகமாக பேசி தீர்வு காண சம்மதம் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையின்போது, சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, தேசியக்கொடியை அவமதித்த அதிகாரியை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வலியுறுத்தினர். நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Similar News