செய்திகள்

டாக்கா விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்: தீவிரவாதி உயிரிழப்பு

Published On 2017-03-24 15:54 GMT   |   Update On 2017-03-24 15:54 GMT
வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையம் அருகில் உள்ள சோதனைச் சாவடியில் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
டாக்கா:

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீவிர கண்காணிப்பில் உள்ள முக்கியமான விமான நிலையம் ஆகும். ஏற்கனவே, கடந்த வாரம் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே விமான நிலைத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி, பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருந்ததால் வெளிப்பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகே தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், அந்த தீவிரவாதி உடல் சிதறி இறந்துள்ளான். ஆனால், பொதுமக்கள் தரப்பிலோ போலீஸ் தரப்பிலோ இழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.



தற்கொலைப்படை தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார், துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அருகாமையில் வேறு ஒரு தீவிரவாதி பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Similar News