செய்திகள்

லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு வடகொரியா இரங்கல் செய்தி

Published On 2017-03-24 11:59 GMT   |   Update On 2017-03-24 11:59 GMT
லண்டன் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் தெரசா மேவுக்கு வடகொரியா இரங்கல் செய்தி அனுப்பியுள்ளது.
பியாங்யாங்:

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், லண்டன் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்து பிரிட்டனுக்கு வடகொரியா செய்தி அனுப்பியுள்ளது. வடகொரியா பிரதமர் பக் பாங்-ஜு, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு இந்த இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.



இந்த செய்தியில், அனைத்துவிதமான தீவிரவாத செயல்பாடுகளையும் வடகொரியா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக   குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளில் வடகொரியாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் நாடாக பிரிட்டன் உள்ளது. பியாங்யாங்கில் 2000-ம் ஆண்டு லண்டனுக்கான தூதரகம் தொடங்கப்பட்டது முதல் இருநாடுகளிடையே நல்லுறவு நீடித்து வருகிறது.

முன்னதாக, பிரிட்டன் பாராளுமன்றம் அருகே நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியும் லண்டன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பிரதமர் தெரசா மே பாராளுமன்றத்திற்கு உள்ளே இருந்த போது நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News