செய்திகள்

எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்: அமெரிக்க மந்திரி திட்டவட்டம்

Published On 2017-03-23 21:59 GMT   |   Update On 2017-03-23 21:59 GMT
ஐ.எஸ். துணைத்தளபதிகள் அனைவரும் பலியான நிலையில் ‘எந்த நேரத்திலும் அல் பாக்தாதி கொல்லப்படுவார்’ என அமெரிக்க மந்திரி திட்டவட்டமாக கூறினார்.
வாஷிங்டன்:

உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிப்பது குறித்த 68 உலக நாடுகள் கொண்ட கூட்டணி பேரவை கூட்டம், வாஷிங்டனில் நடந்தது.

இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, “ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் துணைத்தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். குறிப்பாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும் சாகடிக்கப்பட்டு விட்டார். எந்த நேரத்திலும் அந்த அமைப்பின் தலைவனான அல் பாக்தாதி கொல்லப்பட்டு விடுவார்” என உறுதிபடகூறினார்.

ஈராக்கின் முக்கிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்து முழுமையாக மீட்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். அப்போது அவர், “ஈராக் படைகள், குர்து பெஷ்மெர்கா படைகளின் ஒத்துழைப்பு இன்றி, மொசூல் நகரை ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து முழுமையாக மீட்டு விட முடியாது” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “நமது பொது எதிரியான ஐ.எஸ். அமைப்புக்கு ஜனாதிபதி டிரம்பின் தலைமையும், வரலாற்று சிறப்புமிக்க கூட்டாளிகளின் பலமும் மிகுந்த நெருக்கடியை அளித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் புதிய கூட்டாளியாக இன்டர்போல் என்னும் சர்வதேச போலீசும் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 

Similar News