செய்திகள்

டிரம்ப் வெற்றியில் ரஷ்யா தலையீடா? எப்.பி.ஐ புதிய தகவல்

Published On 2017-03-21 00:31 GMT   |   Update On 2017-03-21 00:31 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய அரசு சில முயற்சிகள் மேற்கொண்டதாக வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்ய அரசு சில முயற்சிகள் மேற்கொண்டதாக வந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருவதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக  ரஷ்ய உளவுத்துறை சில ரகசிய முயற்சிகள் மேற்கொண்டதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இதே போல் டிரம்ப் உபயோகப்படுத்திய தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக அவர், முன்னாள் அதிபர் ஒபாமா மீது புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உளவுத்துறை அமைப்பான எப்.பி.ஐ-ன் இயக்குநர் ஜேம்ஸ் கோமி ,” கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியில் ரஷ்யா தலையீடு உள்ளதா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். டிரம்ப் தனது தொலைபேசி உரையாடல்களை ஒபாமா நிர்வாகம் ஒட்டுகேட்டது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் குற்றச்சாட்டை முன்னாள் அதிபர் ஒபாமா தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தற்போது இதே புகாரை எப்.பி.ஐ ஆதாரமற்றது என கூறியது குறிப்பிடத்தக்கது. அதே போல் டிரம்ப் வெற்றிக்கு ரஷ்ய உளவுத்துறை உதவியதாக வந்த புகாரை ரஷ்ய அரசும் மறுத்துள்ளது.

Similar News