செய்திகள்

போர்க்குற்ற விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு 4 நாடுகள் ஆதரவு

Published On 2017-03-19 23:43 GMT   |   Update On 2017-03-19 23:43 GMT
போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கைக்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கொழும்பு:

போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கைக்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன. போர் இல்லா பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

போர்க்குற்றங்களுக்கு விடுதலைப்புலிகள்மீதும், சிங்கள ராணுவம் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூறியது. ஆனால் அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கை, “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகள் மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் தந்து வருகின்றன. ஆனால் இதில் இலங்கை 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.

அந்த அவகாசத்தை வழங்கி விட்டால், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் தள்ளிப்போகும் நிலை உருவாகும். இலங்கையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் தீர்மானத்துக்கு மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Similar News