செய்திகள்

தென்சீனக் கடலில் சீனாவின் பயணிகள் கப்பல் செல்வதற்கு வியட்நாம் எதிர்ப்பு

Published On 2017-03-13 15:16 GMT   |   Update On 2017-03-13 15:16 GMT
தென்சீனக் கடல்பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு சீனா பயணிகள் கப்பல் செல்வதற்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இத்திட்டத்தை சீனா நிறுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஹனோய்:

தென் சீனக் கடல் பகுதியின் பெரும் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்து கடற்படை தளங்களை நிறுவி வருகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், இம்மாதத்தின் தொடக்கத்தில் தென்சீனக் கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுக்கு சீனா பயணிகள் கப்பல் ஒன்றை இயக்கியது. சுமார் 300 பயணிகள் வரை இந்தக் கப்பலில் பயணம் செய்துள்ளனர்.

சீனாவின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வியட்நாம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லீ ஹாய் பிஃன், “சீனாவின் இந்த செயல் வியட்நாம் நாட்டின் இறையாண்மையை மீறும் வண்ணம் உள்ளது. சர்வதேச விதிகளின் படி சீனா இத்தகைய செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு சுமார் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் தென்சீனக் கடலின் 90 சதவிகித உரிமையை சீனா கோரி வருகிறது. சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளை ஏற்கனவே தைவான் நாடும் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News