செய்திகள்

காந்தி நினைவிடத்தில் ஹமீது அன்சாரி மலர் அஞ்சலி

Published On 2017-02-23 18:33 GMT   |   Update On 2017-02-23 18:33 GMT
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உகாண்டா நாட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று, அங்குள்ள காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
ஜின்ஜா:

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் அவரது மனைவி சல்மா அன்சாரி மற்றும் மத்திய மந்திரி விஜய் சாம்பலா மற்றும் 4 எம்.பி.க்கள் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவும் சென்று உள்ளது.

ருவாண்டா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கடந்த 21-ந் தேதி உகாண்டா சென்றார். அவரை ஜின்ஜா எம்.பி. மோசஸ் பால்யேகு மற்றும் ஜின்ஜா மேயர் ஆகியோர் வரவேற்றனர். உகாண்டாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பை வெளிக்காட்டும் வகையில் கடந்த 1948-ம் ஆண்டு உகாண்டா நாட்டின் நைல் நதி கரையோரம் மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று உகாண்டா நாட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று, அங்குள்ள காந்தியின் மார்பளவு சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Similar News