செய்திகள்

3 லட்சம் இந்தியர் உள்பட 1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம்: டிரம்ப் அடுத்த அதிரடி

Published On 2017-02-23 08:27 GMT   |   Update On 2017-02-23 08:27 GMT
அமெரிக்காவில் இருந்து 3 லட்சம் இந்தியர் உள்பட 1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போதே பல அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியுரிமை கட்டுப்படுத்தப்படும். வெளி நாட்டினருக்கு அமெரிக்க வேலைவாய்ப்புகள் தடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

அதன்படி அவர் செயல்பட ஆரம்பித்துள்ளார். கடந்த மாதம் 20-ந் தேதி அவர் அதிபராக பதவி ஏற்றார். பதவி ஏற்றதுமே வெளிநாட்டினருக்கு எதிராக அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதன்படி 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் கடும் சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சிறு சந்தேகங்கள் இருந்தால் கூட அவர்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் சட்ட விதிகளை மீறி குடியிருப்பவர்கள், உரிய ஆவணமின்றி குடியிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் மிக சிறிய தவறுகள் செய்தால் கூட அவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.



அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை இதுவரை நாட்டை விட்டு வெளியேற செய்யாமல் விதிமுறைகளை தளர்த்தி அங்கேயே தங்க வைத்திருந்தனர். இப்போது இதுபோன்ற நபர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி டிரம்ப் உத்தரவிட்டு இருக்கிறார்.

எனவே, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணம் இல்லாமல் 3 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. டொனால்டு டிரம்ப் நடவடிக்கையால் அவர்களும் வெளியேற்றப்பட உள்ளனர்.

மேலும் சிறு குற்றங்கள் செய்தாலும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறுவதால் அதிலும் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். சிறு தவறு செய்தாலும் வெளியேற்றப்படுவார்கள் என்பதால் இவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

அதிபர் டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் கலக்கத்தில் உள்ளனர். ஆனால், அதிபருடைய நடவடிக்கைகளுக்கு எதிர் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Similar News