செய்திகள்

எனது ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு உதவினோம்: பாக். முன்னாள் அதிபர் முஷரப் பகிரங்க பேட்டி

Published On 2017-02-20 17:53 GMT   |   Update On 2017-02-20 17:53 GMT
காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு தனது ஆட்சி காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியதாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தனது ஆட்சி காலத்தின் போது காஷ்மீர் பிரிவினைவாதிகளை நிர்வகித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே காஷ்மீர் பிரச்சனை அரசியல் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியது என்பதை தான் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்,  

பாகிஸ்தான் நாட்டு அதிபராக 2001 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பர்வேஷ் முஷரப் பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், இதற்கு இந்தியா உடன்படவில்லை என்றும் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார்.  

பாகிஸ்தானின் அதிபர் மற்றும் ராணுவ பிரிவு தலைவராக நான் பதவியில் இருந்த போது இந்தியா விவாதிக்கவே தயாராக இல்லாதவற்றை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க நாங்கள் முயற்சித்தோம் என பேட்டியின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். இதோடு காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பலவிதங்களில் உதவியுள்ளோம், பின் இப்பிரச்சனை அரசியல் மூலம் தீர்க்கப்பட வேண்டியதை அறிந்து கொண்டோம் என தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு என பல கிரிமினல் வழக்குகள் முஷரப் மீது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் காரணமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து முஷரப் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு ஏற்று, அவருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து அவரது பெயர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம், முஷரப் துபாய் சென்றார்.

Similar News