செய்திகள்

ஏமனில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்: 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலி

Published On 2017-01-29 12:54 GMT   |   Update On 2017-01-29 12:54 GMT
ஏமன் நாட்டில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது ஆகும்.
சனா:

ஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி 

கிளர்ச்சியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சவுதி கூட்டுப்படைகளின் தாக்குதலின்போது தொடர்ந்து அப்பாவி மக்களும் பலியாகி வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஏமன் நாட்டில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 16 பொதுமக்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய பய்டா மாகாணத்தில் உள்ள யாக்லா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பெண்களும், 8 குழந்தைகளும் பலியாகினர்.

இந்த செய்திகள் உறுதி செய்யப்பட்டால், அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது ஆகும். அதேபோல், பல வருடங்களுக்கு பிறகு அமெரிக்கா ஏமனில் நடத்தியுள்ள தாக்குதல் இது.

அமெரிக்காவின் சிறப்பு படை வீரகள் ஹெலிக்காப்டர் மூலம் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பழங்குடியின தலைவனை குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 20-க்கும் அதிகமான ஹெலிக்காப்டர்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபடுத்தப்பட்டன. பள்ளிகள், மசூதிகள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகியவற்றையும் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டன.

Similar News