செய்திகள்

கலைத்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு - தென் கொரிய பெண் மந்திரி கைது

Published On 2017-01-21 17:34 GMT   |   Update On 2017-01-21 17:34 GMT
அரசுக்கு எதிரான கலைத்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தென் கொரிய பெண் மந்திரி கைது செய்யப்பட்டார்
சியோல்:

தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி நீக்க தீர்மான விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் அந்த நாட்டின் கலாசார துறை மந்திரியாக பதவி வகித்து வந்த சோ யூன் சன் என்ற பெண், கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வந்த கலைத்துறையினரை கருப்பு பட்டியலில் சேர்த்ததில் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த கலைத்துறையினர், அரசின் உதவிகளைப் பெற முடியாது. அவருடன் அதிபரின் ஊழியர்கள் பிரிவு முன்னாள் தலைவர் கிம் கி சூனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகவும், அவர்கள் ஆதாரங்களை அழித்து விடும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதி, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சோ யூன் சன்னும், கிம் கி சூனும் முறையே 21 மணி நேரமும், 15 மணி நேரமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் இருவரும் அதிபர் பார்க் கியுன் ஹைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

தென்கொரியாவில் அரசு வக்கீல்கள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள முதல்-மந்திரி என்ற பெயர், சோ யூன் சன்னுக்கு கிடைத்துள்ளது.

Similar News