செய்திகள்

டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பாலிவுட் கலைஞர்கள் நடனம்

Published On 2017-01-19 23:06 GMT   |   Update On 2017-01-19 23:06 GMT
அமெரிக்காவில் இன்று நடைபெறும் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் பாலிவுட் நடனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அவர், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் இந்த வண்ணமிகு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த விழாவில் சர்வதேச நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதில் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் பாலிவுட் நடனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் இந்திய அழகி மானஸ்வி மாம்காய் தலைமையில் நடைபெறும் இந்த நடனத்தில் அமெரிக்க கலைஞர்களுடன் 30 பாலிவுட் நடனக்கலைஞர்களும் பங்கேற்று ஆடுகின்றனர்.

இதற்காக அவர்களுக்கு கடந்த சில நாட்களாக வாஷிங்டனில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மும்பை அருகே உள்ள நலசபோராவை சேர்ந்த சுரேஷ் முகுந்த் என்ற நடன இயக்குனர், இந்த பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த வாய்ப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்று பெருமிதத்துடன் கூறினார். 

Similar News