செய்திகள்

ஆப்பிரிக்காவின் கம்பியா நாட்டில் அவசரநிலை பிரகடனம்: அதிபர் யஹ்யா அறிவிப்பு

Published On 2017-01-17 19:44 GMT   |   Update On 2017-01-17 19:44 GMT
மேற்கு ஆப்பிரிக்காவின் கம்பியா நாட்டில் 90 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்ஜூல்:

மேற்கு ஆப்பிரிக்காவின் கம்பியா நாட்டில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் யஹ்யா ஜம்மெஹ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிபர் யஹ்யாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த 90 நாட்களுக்கு இந்த அறிவிப்பு அவர் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டின் தலையீடு அதிகமாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாதுகாப்பு படையினருக்கு அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார்.

தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தார். யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார்.

Similar News