செய்திகள்

இரசாயன தாக்குதலில் சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு தொடர்பு

Published On 2017-01-13 23:52 GMT   |   Update On 2017-01-13 23:52 GMT
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.
டமஸ்கஸ்:

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது.

மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில், சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத் மற்றும் அவரது சகோதரருக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச விசாரணை அமைப்புகள் முதன் முறையாக குற்றம்சாட்டியுள்ளது.

ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் கூட்டு விசாரணை மற்றும் சர்வதேச இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பின் கண்காணிப்பு மையம் ஏற்கனவே ராணுவ குழுக்களை மட்டும் கண்டறிந்து இருந்தது. ஆனால் எந்த கமாண்டோ மற்றும் அதிகாரியின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று சிரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News