செய்திகள்
வானத்தில் தோன்றிய மர்ம பொருள்.

இத்தாலியில் வேற்று கிரகத்தினரின் பறக்கும் தட்டு வந்ததாக பரபரப்பு

Published On 2017-01-12 07:12 GMT   |   Update On 2017-01-12 07:13 GMT
இத்தாலியின் தென் கிழக்கு பகுதியில் வானில் பறந்த மர்ம பொருள் வேற்று கிரகத்தினரின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் நிபுணர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
ரோம்:

இத்தாலியின் தென் கிழக்கு பகுதியில் சாலன்றோ என்ற நகரம் உள்ளது. இங்கு இரவு 8 மணி அளவில் வானத்தில் மர்ம பொருள் ஒன்று பறந்தது. முதலில் புள்ளி போல் தெரிந்த அந்த மர்ம பொருள் பல வண்ணத்தில் மின்னியபடி வானத்தில் சுற்றியது.

ஆரம்பத்தில் நீள் வட்டம் தோற்றத்தில் இருந்த அந்த மர்ம பொருள் பின்னர் வட்ட வடிமாகத் தெரிந்தது. அப்போது அது பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. சிறிது நேரம் கழித்து அந்த பொருள் இரண்டாக உடைந்து துருக்கியை நோக்கி செல்வது போல் இருந்தது. அடுத்து அந்த பொருளை காணவில்லை. 4 நிமிட நேரம் அது வானத்தில் தென்பட்டது.

இந்த காட்சியை ஏராளமானோர் பார்த்துள்ளனர். மேலும் லூசியோ மார்கிட்டோ என்ற ஆசிரியர் மர்ம பொருளை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். பறக்கும் தட்டை ஆய்வு செய்யும் நிபுணர்களும் இந்த படத்தை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இது வீனஸ் கிரகத்தின் காட்சியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். சில நேரங்களில் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். அது பூமி அருகே வந்ததால் இப்படி தோன்றி இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

Similar News