செய்திகள்

ஆப்கானிஸ்தானில் விமானப்படை விமானியான அகதிப்பெண்

Published On 2016-12-08 05:04 GMT   |   Update On 2016-12-08 05:04 GMT
ஆப்கானிஸ்தானில் அகதிப்பெண் ஒருவர் விமானப்படை விமானி ஆகி இருக்கிறார். மேலும் இவர் ஆப்கானிஸ்தான் 2-வது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் விமானப்படையில் பெண் விமானி ஆக இருப்பவர் கேப்டன் சபியா பெரோஷி. இவர் ஆப்கானிஸ்தானின் 2-வது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். விமானப்படையில் சரக்கு விமானம் ஓட்டி வருகிறார்.

அதில் என்ன விசே‌ஷம் என்றால் இவர் குழந்தையாக இருந்த போது பாகிஸ்தானில் அகதியாக தங்கி இருந்தவர். 1990-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் வசம் இருந்தது.

அப்போது காபூலில் இருந்து வெளியேறி குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தார். தலிபான்களின் ஆதிக்கம் வீழ்ந்ததும் மீண்டும் ஆப்கானிஸ்தான் வந்து படித்து பட்டம் பெற்றார்.

உயர்நிலைப்பள்ளியில் படித்த போது பெண்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று டி.வி.யில் வலியுறுத்தப்பட்டது. இது அவரது மனதில் பதிந்தது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர் விமானப்படையில் விமானி ஆக சேர்ந்தார்.

இப்பணியில் சேர அவருடன் 12 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் பெரோஷி ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறும் போது, ராணுவ சீருடை அணிந்தவுடன் பெண்ணான நான் மிகவும் பெருமை அடைவதாக உணர்ந்தேன். இப்பணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.

Similar News