செய்திகள்

டொனால்ட் டிரம்ப்பின் ஒருநாள் பாதுகாப்பு செலவு 10 லட்சம் டாலர்

Published On 2016-12-03 07:58 GMT   |   Update On 2016-12-03 07:58 GMT
அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு நியூயார்க் நகர நிர்வாகம் நாளொன்றுக்கு 10 லட்சம் டாலர் செலவிடுகிறது.
நியூயார்க்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் நியூயார்க் மாநிலத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரில் உள்ள சொகுசு மாளிகையில் வாழ்ந்து வருகிறார். அதிபர் தேர்தலில் இவர் வென்றதில் இருந்து நியூயார்க் நகர போலீசார் மற்றும் அமெரிக்காவின் உளவுப்படை அதிகாரிகள் அவரது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

டொனால்ட் டிரம்ப்பின் மாளிகைக்கு செல்லும் பாதைகளை சுற்றிலும் சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதமேந்திய போலீசார் இந்த சாலைகளை இரவும், பகலும் கண்காணித்து வருகின்றனர்.

இவர்களுக்கான சம்பளம் மற்றும் இதரப் படிகள் என நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 6 கோடி ரூபாய்) செலவாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகையை எல்லாம் நியூயார்க் நகராட்சி நிர்வாகம் ஏற்று வருகிறது.

வரும் ஜனவரி மாதம் நாட்டின் அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், அடுத்த நான்காண்டுகளுக்கு இந்த பதவியில் இருக்கும்வரை அவரது குடும்பத்தார் வசிக்கும் மாளிகைக்கு பாதுகாப்பு வழங்க சுமார் 100 கோடி டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் பாதுகாப்புக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட நியூயார்க் நகராட்சி நிர்வாகத்தால் இயலாது என்பதால், அவரது பாதுகாப்பு செலவினங்களுக்காக அமெரிக்காவின் மைய அரசு நிர்வாகத்தில் இருந்து நிதி அளிக்கப்பட வேண்டும் என நியூயார்க் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆன்லைன் மூலம் ஆதரவு திரட்டும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று வெள்ளை மாளிகையில் தங்கி வாழ்ந்தாலும், எனது 10 வயது மகனின் பள்ளிப் படிப்பு முடியும்வரை அவனும் என்னுடையை மனைவியும் நியூயார்க் நகரில்தான் வசிப்பார்கள் என்று முன்னர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது, நினைவிருக்கலாம்.

Similar News