செய்திகள்

மலர் சாகுபடியை விட்டு கஞ்சா பயிருக்கு தாவும் கனடா விவசாயிகள்

Published On 2016-12-02 09:02 GMT   |   Update On 2016-12-02 09:03 GMT
கனடா நாட்டின் பெரும்பான்மை மலர் தோட்ட விவசாயிகள் கஞ்சா பயிர் வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொரான்ட்டோ:

கனடா நாட்டில் இதுவரை மருத்துவ தேவைக்காக மட்டும் போதைப்பொருளான கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கேளிக்கைக்காகவும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்க அரசு தீர்மானித்துள்ளது. தற்போது, உள்நாட்டில் கஞ்சா விற்பனை மூலம் 1.25 கோடி கனடா டாலர்கள் அரசுக்கு வருமானமாக கிடைத்து வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் புதிய சட்டதிருத்தம் செய்யப்பட்டு கேளிக்கைக்காகவும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டால் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் கஞ்சா விற்பனை சுமார் 460 கோடி கனடா டாலர்களாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கள்ளத்தனமான கஞ்சா விற்பனையை தடுக்கவும், சட்ட அனுமதியுடன் நடைபெறும் கஞ்சா விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகையை இளைஞர்களின் மேம்பாட்டுக்காக செலவிடப் போவதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் சந்தோஷத்துக்காக கஞ்சா புகைக்க ஆரம்பித்து விட்டால் உள்நாட்டு கஞ்சா தேவை வரும் இரு ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் கிலோவாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இங்குள்ள ஒன்ட்டாரியோலா, பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பண்ணை விவசாயிகள் லாவெண்டர் போன்ற நறுமண மலர்களை பயிரிடுவதற்கு பதிலாக இப்போதே கஞ்சா விளைவிக்க தொடங்கி விட்டனர். ஒவ்வொரு பண்ணையில் இருந்தும் சுமார் 100 முதல் 10 ஆயிரம் கிலோ கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 400 பண்ணை விவசாயிகள் தங்களது நிலங்களில் கஞ்சா பயிரிட அனுமதிக்குமாறு அரசை அணுகியுள்ளனர்.

Similar News