செய்திகள்

பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி

Published On 2016-11-03 06:20 GMT   |   Update On 2016-11-03 06:20 GMT
பாகிஸ்தானில் இரண்டு ரெயில்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம் அருகில் இன்று காலை ஜகாரியா எக்ஸ்பிரஸ் மற்றும் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும், பரீத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகளும் கடுமையாக சேதமடைந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 16 பேர் பலியாகினர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜகாரியா எக்ஸ்பிரஸ் டிரைவர் சிக்னலை கவனிக்காமல் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக கராச்சியில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரெயில்வே மந்திரி, விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News