செய்திகள்

மொசூல் நகரில் 232 பேரை படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

Published On 2016-10-28 11:33 GMT   |   Update On 2016-10-28 11:33 GMT
ஈராக்கில் அரசுப் படைகள் மொசூல் நகருக்குள் முன்னேறி வரும் நிலையில், ஆத்திரமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 232 பேரை படுகொலை செய்துள்ளனர்.
ஜெனீவா:

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் 50 ஆயிரம் ஈராக் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினரும், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்களும், ஷியா தீவிரவாதிகளும் ஆதரவாக உள்ளனர்.

இவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த ராணுவ நிபுணர்கள் 100 பேர் தாக்குதல் உத்திகளை வழங்கி வருகின்றனர். மேலும் அமெரிக்க ராணுவமும் இவர்களுக்கு ஆதரவாக குண்டு வீசி வருகிறது.

கடந்த 17-ந்தேதி முதல் மொசூல் பகுதியை மீட்க அதிரடி தாக்குதல்கள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 900 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் கலக்கமடைந்துள்ளனர்.

அதேசமயம் ஈராக் படைகள் முன்னேறி வருவதால், ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் வசம் பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் அரசுப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்களை கொன்று குவித்து தங்கள் ஆத்திரத்தை தீர்க்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் 232 பொதுமக்களை சுட்டுக் கொன்றதாகவும், இதில் 190 பேர் ஈராக்கின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெனிவாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே ஈராக் சிறப்பு படைகள் கைப்பற்றிய கிழக்கு மொசூல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, டோப் ஜாவா  கிராமத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய சுரங்கப் பாதைகள், வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

Similar News