செய்திகள்

சிரியாவில் விமானத் தாக்குதல்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி

Published On 2016-10-26 14:17 GMT   |   Update On 2016-10-26 14:17 GMT
சிரியாவில் இன்று நடைபெற்ற விமானத் தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர்.
பெய்ரூட்:

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்காக அந்த நகரின் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேசமயம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்திலும் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது இன்று காலை நடைபெற்ற விமானத் தாக்குதலுக்கு 7 பள்ளிக் குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷிய படைகளா? இல்லை சிரிய படைகளா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஹாஸ் கிராமத்தில் தாக்குதல் தொடங்கியதும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவர்கள் புறப்பட்டுச் சென்றபோது ஒரு ராக்கெட் குண்டு பள்ளி முன்பாக வந்து விழுந்துள்ளது. இதில், மாணவர்கள் பலியாகி உள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த விமான தாக்குதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்றதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News