செய்திகள்

இறுதிக்கட்டமாக ஜனநாயகத்தையே அழிக்க துணிந்து விட்டார்: டிரம்ப் மீது ஹிலாரி பாய்ச்சல்

Published On 2016-10-26 07:56 GMT   |   Update On 2016-10-26 07:56 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தனது பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக நாட்டின் ஜனநாயகத்தையே அழிக்க துணிந்து விட்டதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது:-

மிக நீண்டகாலமாக, மிக உயர்ந்த ஜனநாயக நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருவதற்கு ஒரு காரணம் உள்ளது என்பதை இந்த உலகம் அறிந்துள்ளது. நீங்கள் பார்வைக்கு எப்படி தோன்றுகிறீர்கள்? உங்கள் பெற்றோர் எங்கு பிறந்தார்கள்? நீங்கள் யாரை விரும்புகிறீர்கள்? என்பதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.

நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் உரிமை அமெரிக்காவில் உள்ள உங்கள் அனைவருக்கும் உண்டு.

ஆனால், கடந்த 240 ஆண்டுகளாக நமது நாட்டை உயர்வுப்படுத்திவரும் அனைத்து விதமான சிறப்பம்சங்கள் மீதும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார். தனது பிரசார நேரம் முழுவதையும் மாறி, மாறி அமெரிக்காவில் உள்ள பல குழுவினர்மீது தாக்குதல் நடத்துவதிலேயே அவர் செலவிட்டுள்ளார்.

முதலில் குடியேறிகளையும், பின்னர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், லத்தீன் இனத்தவர்கள், பெண்கள், முஸ்லிம்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்மீது தாக்குதல் நடத்திவந்த இவரது இறுதி இலக்கு நாட்டின் ஜனநாயகம் மீதான தாக்குதலாக மாறியுள்ளது.

இந்த ஜனநாயக தாக்குதலுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சுமார் அறுபது லட்சம் மக்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். மீதமுள்ளவர்களும் வாக்களிக்க உள்ளனர். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடு என வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ள அமெரிக்காவின் அடிப்படை தத்துவத்தை மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News