செய்திகள்

நீண்ட கூந்தலால் முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக மாறிய நாய்

Published On 2016-10-24 11:59 GMT   |   Update On 2016-10-24 11:59 GMT
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படம் மூலம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாய் ஒன்று முன்னணி நிறுவனங்களின் விளம்பர மாடலாக மாறியுள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன் காணப்படுகிறது. சமீபத்தில் லூகே டீயின் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர, நீண்ட கூந்தலுடன் வித்தியாசமாகத் தோற்றமளித்த டீயின் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் பேரைக் கவர்ந்து விட்டது.

இதனால் டீயின் புகைப்படத்தை லைக் செய்த கையோடு பலரும் அதன் புகைப்படத்தை மற்றவர்களுக்கும் பகிர ஆரம்பித்தனர். இந்த பகிர்வு ஒருசில நாட்களிலேயே லட்சத்தைத் தாண்டியது. இதனைப் பார்த்த பல்வேறு விளம்பர நிறுவனங்கள் டீயின் உரிமையாளரான லூகேவை அணுகி விளம்பரங்களில் டீயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து நாய்களுக்கான உணவுகளைத் தயாரிக்கும் ராயல் கெனின் நிறுவனத்தின் ஸ்போக்ஸ் டாக் மற்றும் நாய்களுக்கான வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கும் ஹரியாத் அண்ட் ஹவுண்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் டீ ஒப்பந்தமாகியிருக்கிறது.

இதுகுறித்து டீயின் உரிமையாளர் லூகே கூறும்போது, "டீயின் சில்வர் நிற கூந்தல் தான் அதனை இந்தளவுக்கு பிரபலமாக்கியிருக்கிறது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களில் மட்டும் டீ நடிக்கும். அனிமல் ஆக்டராக டீயை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Similar News