செய்திகள்
ஆடம் சுபின்

பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிரவாதிகளை நாங்களே ‘போட்டுத் தள்ளுவோம்’: அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2016-10-23 07:59 GMT   |   Update On 2016-10-23 07:59 GMT
உளவுத்துறையின் அரவணைப்புடன் வாலாட்டிவரும் தீவிரவாதிகள் மீது பாரபட்சம் காட்டாமல் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியாக நின்று அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை தாக்கி அழிப்போம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அரசின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு செல்லும் நிதியை தடுக்கும் துறைக்கான செயலாளர் ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத குழுக்களுக்கு அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது தொடர்பாக அவர் பேசியதாவது:-

உங்கள் நாட்டில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கையில் அந்நாட்டுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், பாகிஸ்தான் அரசுக்கு உள்ளே இருக்கும் சில சக்திகள்.., குறிப்பாக, அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. எல்லா தீவிரவாத குழுக்கள் மீதும் ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன.

அங்கு இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதிலும், அவர்களுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுப்பதிலும் பாகிஸ்தானோடு தொடர்ந்து ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள அதேவேளையில், அவசியம் ஏற்பட்டால் தனியாக நின்று இந்த தீவிரவாத அமைப்புகளை தடுக்கவும், ஒழிக்கவும் அமெரிக்க அரசு தயங்காது’.

மேற்கண்டவாறு அவர் எச்சரித்துள்ளார்.

Similar News