செய்திகள்

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் 20 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்

Published On 2016-10-22 15:12 GMT   |   Update On 2016-10-22 15:12 GMT
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியின் 20 ஆண்டு தண்டனையை குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கெய்ரோ:

எகிப்து நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரை பெற்றவர் முகமது மோர்சி. ஆனால் அதே மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலையும் வந்தது. இதையடுத்து 2013–ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது, அவற்றை ஒடுக்கும் விதத்தில் போராட்டக்காரர்களை சித்ரவதை செய்து, கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது  குற்றச்சாட்டுகள் எழுந்தன. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

2012–ம் ஆண்டு, அதிபர் மாளிகைக்கு எதிரே நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவியது தொடர்பான வழக்கை கெய்ரோ நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், மோர்சிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட அவரது சகோதரத்துவ கட்சியினருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மோர்சிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. இது மோர்சிக்கு எதிரான முதல் இறுதி தீர்ப்பாகும். மேலும் 8 பேருக்கும் 20 ஆண்டுகள் வரை தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்களின் மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது.

Similar News