செய்திகள்

பெண் நிருபரின் கன்னத்தில் அறைந்த பாகிஸ்தான் கான்ஸ்டபிள்

Published On 2016-10-21 16:07 GMT   |   Update On 2016-10-21 16:07 GMT
பாகிஸ்தானில் பெண் நிருபரை போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தேசிய தரவுத்தள பதிவு அலுவலகத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் செய்தி சேகரிக்க கேமராமேனுடன் உள்ளே வந்தார். கேமராமேன் வீடியோ எடுக்க, பெண் நிருபர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தினரை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போலீஸ்காரர் கேமராவை மறைக்கும்படி சென்றதால், அவரை ஒதுங்கி செல்லும்படி நிருபர் கூறிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு உரையாடல் நீண்டுகொண்டே செல்ல, திடீரென அந்த போலீஸ்காரர், நிருபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவானது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலான நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தும்படி உள்துறை மந்திரி சவுதாரி நிசார் அலி கான் உத்தரவிட்டுள்ளார். நடந்த சம்பவம் அனைத்தும் பதிவான வீடியோ பதிவு அவரிடம் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரச்சனை பெரிதானதையடுத்து அந்த போலீஸ்காரர் தலைமறைவாகிவிட்டார். நிருபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து பாதுகாவலரின் சீருடையை கிழித்ததாக பெண் நிருபர் மீது அலுவலக தலைமை அதிகாரி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை சமூக வலைத்தளங்கள் மூலம் பலர் திட்டி தீர்த்தனர். சிலர், நிருபர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் விமர்சித்து பதிவு செய்தனர்.

Similar News