செய்திகள்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 17 பேர் பலி

Published On 2016-09-27 14:12 GMT   |   Update On 2016-09-27 14:12 GMT
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியை குறிவைத்து இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமுள்ள மாவட்டங்களில் இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. வணிக வளாகங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்-ன் ஜிகாதி குழு பொறுப்பேற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல், பாக்தாத் நகரின் தெற்கில் உள்ள பயா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இந்த பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News