செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒரு குழந்தை உள்பட 8 பேர் படுகாயம்

Published On 2016-09-26 00:15 GMT   |   Update On 2016-09-26 00:15 GMT
அமெரிக்காவில் பால்ட்டிமோர் நகரில் ஒரே நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த 3 மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
பால்ட்டிமோர்:

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர் நகரில் உள்ள ஒரு வீதியில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு வெவ்வேறு முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த 3 மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு 3 வயது பெண் குழந்தை உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பால்ட்டிமோர் நகர போலீஸ் கமிஷனர் கென் டேவிஸ் கூறும்போது, “இந்த சம்பவம், முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தின கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பழிவாங்கும் விதத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கருதுகிறோம்” என்றார்.

படுகாயம் அடைந்தவர்களில் 3 வயது பெண் குழந்தையுடன் ஒரு பெண்ணும் அடங்குவார். மற்ற 6 பேர் ஆண்கள். அவர்கள் 26-39 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News