செய்திகள்

காஷ்மீர் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைதான் உரி தாக்குதல்: நவாஸ் ஷெரிப் வாய்க்கொழுப்பு

Published On 2016-09-24 06:47 GMT   |   Update On 2016-09-24 06:47 GMT
காஷ்மீர் மாநிலத்தில் அரசுப்படைகளின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைதான் உரி தாக்குதல் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இஸ்லாமாபாத் திரும்பும் வழியில் லண்டனில் ஓய்வெடுத்தார்.

அங்கு பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரிப், ‘காஷ்மீரில் கடந்த இருமாதங்களாக நடந்துவரும் அட்டூழியத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் கண்பார்வையை இழந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் மிகவும் மனவேதனையுடனும், ஆவேசத்துடனும் இருக்கிறார்கள். அங்கு உரியில் நடந்த தாக்குதல் அரசுப்படைகளின் அத்துமீறலுக்கு அவர்கள் அளித்த பதிலடியாகவும் இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக, உரி தாக்குதல் உட்பட எந்த தாக்குதலாக இருந்தாலும் பாகிஸ்தான் மீது பழி போடுவதே இந்தியாவுக்கு வேலையாகி விட்டது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நியூயார்க் நகரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்மீது பழி போடுவதற்கு முன்னர், காஷ்மீரில் நடந்துவரும் அத்துமீறலை இந்தியா கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். அங்கு என்ன நடந்து வருகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. காஷ்மீரில் இதுவரை 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Similar News