செய்திகள்

குவெட்டா குண்டு வெடிப்புக்கு பாக். தலிபான் பிரிவு பொறுப்பேற்பு: பலி 70 ஆக உயர்வு

Published On 2016-08-08 16:13 GMT   |   Update On 2016-08-08 16:13 GMT
குவெட்டா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் தலிபான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
கராச்சி:

பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

படுகாயம் அடைந்த அவரை  உடனடியாக  சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள்.

35 பேருக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் பிரிவான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜமாட்-உர்-அஹ்ரான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள இ-மெயில் அறிக்கையில் ‘‘இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதுபோல் தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். விரைவில் வீடியோ செய்தியை வெளியிட இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் லாகூரில் இதே அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் 72 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News