செய்திகள்

தம்பதியை பிணைக்கைதியாக்கி மிரட்டிய வளர்ப்பு பூனை

Published On 2016-06-27 08:53 GMT   |   Update On 2016-06-27 08:53 GMT
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் தம்பதியை பிணைக் கைதியாக்கி வளர்ப்பு பூனை மிரட்டியதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் வந்து மீட்டனர்.

வாஷிங்டன்:

ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் சோமாலியா கடற் கொள்ளையர்கள் பொது மக்களை கைதியாக பிடித்து வைத்து பிணைத் தொகை பறித்து வருகின்றனர். ஆனால், வீட்டில் வளர்க்கும் பூனை எஜமானர்களை பிணைக் கைதிகளாக வைத்து இருந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த தம்பதி தங்களது வீட்டில் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வந்தனர். அதற்கு கொன்னா என பெயரிட்டிருந்தனர்.

அவர்களிடம் அப்பூனை மிகவும் பிரியமாக நடந்து கொள்ளும். எனவே அதை செல்லமாக பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென அப்பூனையின் குணம் மாறியது. மியாவ் என கத்துவதற்கு பதிலாக வினோதமான குரலில் சத்தமிட்டது. திடீரென பெண்ணின் கணவரை கடித்து தாக்கியது.

அதை தொடர்ந்து மிரண்டு தப்பி ஓட முயன்ற தம்பதியை வெளியே விடாமல் கொடூரமாக நடந்து கொண்டு வழி மறித்து பிணைக்கைதி ஆக்கியது.

இதனால் பயந்து போன அவர்கள் அமெரிக்காவின் அவசரகால போலீஸ் நம்பரான 911-க்கு டெலிபோன் செய்தனர். உடனே போலீசார் அவர்களது வீட்டுக்கு விரைந்து வந்து தம்பதியை பத்திரமாக மீட்டனர்.

கொடூரமாக நடந்து கொண்ட பூனையை அங்கிருந்து பிடித்து சென்றனர். இதனால் கணவன்-மனைவி நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Similar News