செய்திகள்

தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டில் தனியே தவிக்கவிட்டு தண்டனை அளித்த பெற்றோர்: தேடும் பணி தீவிரம்

Published On 2016-05-30 10:14 GMT   |   Update On 2016-05-30 10:14 GMT
ஜப்பான் நாட்டில் தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர், விலங்குகள் சுற்றித் திரியும் வனத்தில் தனியே விட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:

ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்றனர். அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்தவண்ணம் இருந்துள்ளான். அத்துடன், வழியில் வரும் வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் சிறுசிறு கற்களை எறிந்து விளையாடியுள்ளான்.

இதனால் கோபமடைந்த பெற்றோர், அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவனை நடுக்காட்டில் தனியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அது கரடிகள் நிரம்பிய காடு ஆகும். 5 நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.

இதையடுத்து அவசர அழைப்பெண் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். முதலில் தங்கள் மகன் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் கூறினர். பின்னர், போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, உண்மையை தெரிவித்தனர்.

இதையடுத்து ஹெலிகாப்டர்களில் நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் போலீசார் காட்டிற்கு சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை முதல் தொடர்ந்து தேடியும் அவனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெறுகிறது.

Similar News