தமிழ்நாடு

மின் கட்டண உயர்வை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்பு சோதனை: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

Published On 2022-09-13 11:39 GMT   |   Update On 2022-09-13 11:39 GMT
  • சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
  • எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை:

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக எஸ்.பி.வேலுமணியின் வீடுகள், அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனைக்கு பிறகு எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள்; ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடப்பது பற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது வீட்டுக்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடந்த சோதனைக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News