தமிழ்நாடு

சென்னை மற்றும் புறநகரில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது- குடிமகன்கள் கடும் திண்டாட்டம்

Published On 2022-09-02 06:56 GMT   |   Update On 2022-09-02 06:56 GMT
  • டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில் வாங்குபவர்கள் இந்த பார்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இதற்கிடையே இந்த பார்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்படாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பார்களை நடத்துவதற்கு அரசு சமீபத்தில் டெண்டர் கோரியது.

ஆனால் இந்த டெண்டர் செயல்முறை வெளிப்படையானதாக இல்லை என்பதால் டெண்டர் முடிவை அறிவிக்க சென்னை ஐகோர்ட்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை தடை விதித்திருந்தது. இதையடுத்து டாஸ்மாக் பார்களுக்கு இதுவரை டெண்டர் விடப்படவில்லை.

டெண்டர் காலம் ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிந்ததால் பார்களை செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து குடிமகன்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்க தலைவர் அன்பரசன் கூறுகையில், 'டாஸ்மாக் முடிவு குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். இனி பார்களை திறக்க கூடாது என்று எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் பார்களை திறக்க தயாரானோம்.

டெண்டர் முடிவடையும் வரை பார்களை திறக்க அனுமதிக்கலாம். அதற்கான மாத தவணையை எங்கள் வைப்புத்தொகையில் இருந்து கழித்துக்கொள்ளலாம். இது டாஸ்மாக் அதிகாரிகள் சட்டவிரோதமாக பார்களை நடத்த வழி வகுக்கும்' என்றார்.

Tags:    

Similar News