தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கும் கடன் அவர்களது உழைப்புக்கு கொடுக்கும் நம்பிக்கை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-03-28 11:06 GMT   |   Update On 2023-03-28 11:06 GMT
  • நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே மணி பேசும் போது, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை குழு கூட்டம் நடத்தி சேமிப்பு செய்து கணக்கு புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் சுய உதவிக்குழுவினரின் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.

21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2022 - 23 ஆம் நிதி ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடி வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால், ரூ.25 ஆயிரத்து 219 ஆயிரம் கோடி சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அளித்துள்ளோம்.

இதன் மூலம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 349 சுய உதவி குழுக்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த நிதி நிலை அறிக்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் தான் முதல் முதலாக மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்படும் கடன் உதவியை அரசும், முதல்-அமைச்சரும் இதை கடன் தொகையாக பார்க்கவில்லை. சுய உதவிக்குழுவில் பங்கேற்றுள்ள சகோதரிகளின் உழைப்பிற்கு கொடுக்கக்கூடிய நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News