தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்

Published On 2022-06-13 07:26 GMT   |   Update On 2022-06-13 11:06 GMT
  • தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
  • கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்து அவ்வப்போது டி.ஆர்.பாலு எம்.பி. பேசி வருகிறார்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். வருகிற புதன் கிழமை அவர் சென்னை திரும்ப உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்து அவ்வப்போது டி.ஆர்.பாலு எம்.பி. பேசி வருகிறார்.

சென்னையில் நடந்த ஒரு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். மதசார்பின்மைக்கு எதிராக சனாதனத்துக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசிவருவது சட்டமீறலாகும். கவர்னரின் பேச்சு வருத்தம் அளிப்பதாகவும் அவர் சொல்லிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அறிக்கையில் கூறி இருந்தார்.

ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து வலியுறுத்தி விட்டு வந்திருந்தார்.

இந்த சூழலில் இப்போது திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தங்கிவிட்டு நாளை காலை பீகார் மாநிலம் பாட்னா செல்கிறார்.

அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் டெல்லி செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து புதன்கிழமை சென்னை திரும்புகிறார்.

கவர்னர் டெல்லியில் யார்-யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரம் எதுவும் வெளியிடப்பட வில்லை.

Tags:    

Similar News