தமிழ்நாடு
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்-பெற்றோர்கள்.

கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி அவினாசியில் அரசு பள்ளி மாணவர்கள்- பெற்றோர்கள் தர்ணா போராட்டம்

Published On 2022-07-05 07:05 GMT   |   Update On 2022-07-05 07:05 GMT
  • திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • பள்ளிக் கல்வித்துறை, வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்து வந்துள்ளனர்.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அவினாசி நகரப்பகுதியை சேர்ந்த 360 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் 3 நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்காலிகமாக ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டதால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு பலமுறை மனு அளித்து வந்துள்ளனர்.

இந்தப்பள்ளியின் 360 மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களாக இன்னும் 5 பேர் நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் 3 பேரை மட்டும் வைத்து பாடம் நடத்தப்படுவதால் குழந்தைகளின் கல்வித்திறன் குறைந்து அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி,இப்பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று மற்ற பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.

இதனை தடுத்திட கோரியும், நிரந்தரமாக 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளி தொடங்கியது முதல் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வாயிலின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவினாசி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பள்ளியின் வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News