தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி வேண்டுகோள்

Published On 2022-06-28 05:38 GMT   |   Update On 2022-06-28 08:40 GMT
  • தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய சமூகத்தீமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன.
  • ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்வதையும், அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும் தடுக்கும் நோக்குடனான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது ஆகும்.

அடுத்தகட்டமாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவசர சட்டத்தை இன்றைக்குள் ஆளுனருக்கு அனுப்ப வேண்டும்; அவரது ஒப்புதலை உடனடியாக பெற்று அரசிதழில் வெளியிட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த மே 31-ந்தேதி தமிழக ஆளுனரை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசிய நான், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும், அதனால் நிகழும் தற்கொலைகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினேன். ஆன்லைன் சூதாட்டங்களால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து ஆளுனரும் கவலை தெரிவித்தார்.

எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டிய சமூகத்தீமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்; வெற்றி பெறும் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News