தமிழ்நாடு

பள்ளிக்கு சென்ற மாணவர்களும் முகக்கவசம் அணியவில்லை


கலெக்டரின் உத்தரவை கண்டுகொள்ளவில்லை: மதுரையில் முகக்கவசம் அணியாமல் திரிந்த மக்கள்

Update: 2022-06-28 08:12 GMT
  • மதுரை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை.
  • மதுரையில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரை:

தமிழகத்தில் செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே 'நோய் பாதிப்பு மிகுந்த பகுதிகளில், பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்' என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

மதுரை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை. கடந்த சில நாட்களாக நோய் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று உத்தரவு வெளியிட்டு இருந்தார். அதில் 'மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும். இது நாளை (இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் பொது மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முக கவசம் அணிகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் செல்வோரை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில், மாவட்ட அளவில் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

மதுரை மாநகரில் உள்ள பஸ் நிலையங்கள், பூங்கா மற்றும் கடை வீதிகளில் இன்று பொதுமக்கள் முக கவசம் அணியாமல் திரிந்தனர். இன்று பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் முக கவசம் அணியவில்லை. அவர்கள் கலெக்டரின் உத்தரவை கண்டுகொள்ளவில்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசாரும் விதிக்கவில்லை.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கலெக்டரின் உத்தரவு குறித்து எங்களுக்கு முழுமையான தகவல் வரவில்லை. அதன் காரணமாக முக கவசம் அணியாத பொதுமக்களிடம் அபராதம் விதிக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என்றனர்.

பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணியாததால் மதுரையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News